என்னுள்ளே உறையும் இறைவனே! உன்பால்
வரிசையாய்க் கேட்பது வலிமைசேர் உடலும்,
தவயோகத்தில் தானமர்ந் திடலும்,
ஆக்க வழியிலே அனைத்தையும் எண்ணவும்,
ஆக்க முறையிலே அனைத்தையும் செய்யவும்,
உறுதியும் தெளிவும் உதவுக-உறுதியாய்!
இறைவா!
நீயெனக் கருளும் நிறை வரம் மூன்றாம்
ஐயா, நீ! எனக்கு உதவுக நிதியம்,
அறந்தன்னைக் காத்திடும் திறமும் அருளுக,
தவநெறி மேன்மையும், தானருளிடுக;
மக்கள் ஆட்சி மலர்ந்திடும் சமூகம்
பொதுநல உடைமை போற்றும் சமூகம்
எனப் பொய்யாய்ப் பலர் சாற்றும் இன்றைய உலகு
ஆன்மக் கனிவும் ஆன்மிகப் பொலிவும்
சார்ந்திடும் சால்புடைச் சமூகமாய் மலரவும்
தவயோகத்தில் தானமர்ந் திடற்கும்
ஆக்கச் சிந்தனை அதன்வழிப் பிறக்கவும்
அருளுக இறைவா! அருளுக இறைவா!
இவ்வகை மூன்று இனிய வரங்களை
ஐயனே - மெய்யுள் ஒளியனே அருள்கவே!!