குருப்பியோ நம:
குருர் பிரம்மா; குருர் விஷ்ணு;
குருர் தேவோ மஹேஸ்வர;
குருர்சா ஷாத் பரம் ப்ரம்ம;
தஸ்மை ஸ்ரீ குருவே நம;
யோகம் என்றால் என்ன?
கடவுள் அல்லது அதீத சக்தி அல்லது அனைத்தையும் உருவாக்கிய இயற்கை சக்தி எனப்படுவது, எங்கும் வியாபித்து இருப்பதோடு நம்முள்ளும் இருக்கின்றது. இவ்வுண்மையை அறியாத காரணத்தினால் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம். நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ள பலர் பல சாதனைகளைக் கையாளுகின்றனர். பலர் அன்றாட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இதனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள். நாம் எந்த அதீத சக்தியினால் வந்தோமோ அதே அதீத சக்தியில் மீண்டும் போய் சேர வேண்டும். இதற்கு இடையே பலவிதமான குழப்பங்கள், தொல்லைகள், பசி, பிணி, மூப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றோம். எது எப்படி இருந்த போதும் ஒரு நாள் இந்த உண்மையை அறிந்து நாம் பிறப்பிக்கப்பட்ட அதீத சக்தியில் மீண்டும் போய் சேர சாதனை செய்தே ஆக வேண்டும். யோகம் என்பது நாம் ஆகிய ஒருமைப்பாடு அல்லது நம்முன் இருக்கும் ஆன்மா அல்லது பரமான்மா அல்லது கடவுள் எனப்படும். நம்முள் இருக்கும் ஆன்மா பரமான்மாவுடன் சேருவதற்கு (Enlighenment) செய்யும் பயிற்சியே யோகம் எனப்படும்.
தவயோகம்:
தவயோகம் அல்லது குண்டலினி யோகம் என்ற பயிற்சியின் சாதனையால் தான் நாம் பிறந்ததின் காரணமாகிய ஆதித சக்தியுடன் நாம் இணைய முடியும். குண்டலினி சக்தி என்பது தெய்வீக சக்தி அல்லது சர்ப சக்தி (Serpent Power) என்று நம் நாட்டில் வழக்கத்தில் உள்ளது. இந்த குண்டலினி சக்தி நமது பூத உடலில் சர்பம் சுருண்டு உறங்குவது போன்று உறங்கி கொண்டு இருக்கின்றது. நமது உடலில் உறங்கி கொண்டு இருக்கும் இந்த தெய்வீக சக்தியாகிய குண்டலினி சக்தியை ஒரு குருவின் தயவினால் தான் விழிப்படையச் செய்து கொள்ள முடியும்.
குரு:
குரு என்றால் நம் நாட்டின் வழக்கப்படி போடிப்பதோடு வழிகாட்டுபவரும் ஆவார். பொதுவாக ஆசிரியர்கள் தாம் கற்றவற்றை போதிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். அதில் 100 சதவிகிதம் செய்முறைப் பயிற்சி இருக்காது. ஆனால் குரு பயிற்சி செய்து தாம் செய்த பயிற்சியினால் கண்ட அனுபவத்தோடு போதிப்பார். குரு போதிக்கும் முறையே முதல் தரமானதாகும். இரண்டாவது குரு வழிகாட்டியாகவும் அமைவார். குரு தமது போதனை முடிந்தபின் தமது மாணவர் அல்லது சீடர்கள் அடைய வேண்டிய முடிவிற்கு வழி காண்பிப்பதோடு எல்லாவிதமான சந்தேகங்களையும் செய்முறை பயிற்சியால் விளங்க வைத்து எல்லா நிலைகளிலும் உயர்வடைய வழி காண்பிப்பார். இந்த குண்டலினி யோகப் பயிற்சிக்கு கண்டிப்பாக குரு தேவை. நமது பூத உடலில் உறங்கிக்கொண்டு இருக்கும் இந்த குண்டலினி சக்தியை விழிப்படைய செய்ய ஒரு குரு தம் கருணையால் தொட வேண்டும். ஒவ்வொரு மனித உடம்பிலும் (1) மூலாதாரம், (2) ஸ்வாதிஷ்டானம், (3) மணிப்பூரகம், (4) அநாஹதம், (5) விசுத்தி, (6) ஆக்ஞா, (7) சகஸ்ராரம் ஆகிய ஏழு சக்கரங்கள் உள்ளன. இந்த குண்டலினி சக்தி நமது முதுகுத்தண்டு முடிகின்ற இடத்தின் உட்பாகத்தில் உள்ள மூலாதாரம் என்ற முதல் சக்கரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கின்றது. இதனை குரு தாம் பயிற்சி செய்து பெற்ற தவ வலிமையாலும், அனுபவத்தாலும், இதற்க்கென்றே உள்ள தனி முறையினாலும் தொட்டு விழிப்படைய செய்து, மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்கரமாகிய நெற்றிக் கண்ணுக்கு வரும் சூட்சும நாடி வழியாக மேல்நோக்கி கொண்டு வந்து நெற்றிக்கு கண்ணில் (இரு புருவங்களுக்கும் இடையில்) வைப்பார். அப்படி அவர் கொண்டு வரும் கதகதப்பான மின்சார சக்தியைப் போன்ற உணர்வொன்று மேலே வருவது தெரிவதோடு, தாம் இதுவரை கண்டிராத புதிய உணர்வை புருவ மத்தியில் பெறுவர். அதற்கு மெய்யுணர்வு எனப்படும். அவ்வுணர்வினை ஒருவர் உணரும் வரை குரு பயிற்சி வாயிலாக போதிப்பார்கள்.
தவயோகத்தின் படிகள்:
(1) முதல் படி:
பொதுவாக இதனை மனதை ஒருமுகப் படுத்தல் அல்லது நிஷ்டை (Concentration) எனப்படும். குண்டலினி சக்தி புருவ மத்தியில் வைக்கப்பட்டதும், தமது அறிவினால் அந்த சக்தியை கவனித்தலாகும்.
(2) இரண்டாவது படி:
இந்த உணர்வு புதியதாகையாலும் பூத உடலுக்கு முன் அனுபவம் இல்லாத காரணத்தினாலும் இது கனமாகவோ அல்லது உறுத்தலாகவோ இருக்கக்கூடும். அது காரணமாக ஒவ்வொருவரும், சக்தியினை புருவ மத்தியில் தமக்கேற்ற அளவில் வைத்துக் கொள்வதோடு, கூட்டிக்கொள்ளவும் குறைத்துக்கொள்ளவும் அளிக்கும் பயிற்சியாகும்.
(3) மூன்றாம் படி:
இது தவம் அல்லது தியானம் எனப்படும். இது ஒருவர் தொடர்ந்து கவனமாக செய்யும் பயிற்சியினால் தானாகவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இது முதல் படியை விட மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதுதான் தவயோக பயிற்சியின் முடிவுக்குக் கொண்டு செல்லும். இதனை குரு எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கமாட்டார். யார் ஒருவர் முதல் பதியாகிய நிஷ்டை நிலையை (Concentration) சிறப்பாகச் செய்து உணர்வினை சரியாக கவனிக்கக்கூடிய திறமை பெற்றவர்களுக்கே சொல்லிக் கொடுப்பார்.